Thursday 29 January 2015

நாட்டுப்புற இலக்கியம்

                  இலக்கியம் என்பது எழுதப்பட்ட பாடல்கள்தான் அவைகளை எழுதவும், வாசிக்கவும், ரசிக்கவும், விமர்சிக்கவும் ஏடறிந்த,எழுத்து வகை அறிந்த அறிஞர்களால் மட்டும் தான் இயலும்,ஏடறியா, எழுத்தறியா சாமானிய மக்களுக்ககு இயலாது என்ற கருத்தினை உடைத்து எழுத்ததறியா எளிய மக்களுக்கும் இலக்கியம் தெரியும் என்ற கருத்துவலுப்பெற்றது 19-ஆம் நூற்றாண்டில் தான்.நாட்டுப்புற இயலைஆய்வுசெய்தவர்களுள் முக்கியமானவரும் முதன்மையானவரும் நடேச சாஸ்திரியார்ஆவார் 1867-ஆம் ஆண்டு மயில் இராவணன் கதை என்ற முதல் தமிழ் கதைப் பாடலை வீராச்சாமிநாயக்கர் என்பார் பதிப்பித்துள்ளார். தமிழறிஞர்கள் மு.அருணாச்சலம் நாட்டுப்புறப் பாடல்களைத் தொகுத்து காற்றினிலே மிதந்த கவிதை என்ற பெயரில் வெளியிட்டார்.இவர்களைத் தொடர்ந்து கி.வா.ஜகந்நாதன் நாடோடிஇலக்கியம் என்ற நூலை வெளியிட்டார். ஆறு.அழுகப்பன்,அன்னகாமு, தமிழண்ணல், அ.மு.பரமசிவாணந்தம், கெ.ஏ.குணசேகரன், கி.இராஜநாராயணன் போன்றவர் நாட்டுப்புறஇலக்கியத்துக்குப் பெருந்தொண்டாற்றியுள்ளனர்.நாட்டுப்புறப்பாடல்களைத் தொகுக்கும் பணியில் பெரிதும் ஈடுபட்டு நாட்டுப்புறப்பாடல்களின்இலக்கியத்தரத்தையும், அவற்றின் சமூகநேக்கினையும் வெளிக்கொணர நாட்டுப்புற இயலுக்கென்றே "ஆராய்ச்சி" என்ற இதழை நடத்தியவர் அறிஞர்.நா.வானமாமலை அவர்கள். நா.வாவைப் பின்ற்றியும் அவர் வழிகாட்டுதலின் படியும் சிவசுப்பிரமணியன் போன்ற பலர் நாட்டுபுற இலக்கியத்தில் பெரிதும் ஈடுபாடுகாட்டி உழைத்தனர்.டாக்டர்.கே.ஏ.குணசேகரன்அவர்கள் "நட்டுப்புற மண்ணும்மக்களும்" என்ற நாட்டுப்புறக்கலைகளான நாட்டுப்புற நடனங்கள் நாட்டுப்புற ஆட்டப்பாடல்கள், நாட்டுப்புறச்சடங்குகள் அவற்றிற்கானப் பாடல்கள் பாடும் முறை தெருக்கூத்துக்களின் வகைகள் அவற்றில் கையாளப்படும் உத்திகள் என விரிவாக ஆய்வு செய்து வெளியிட்டுள்ளார். இவ்வகையில் வெளிவந்த நூல்களுள் முழுமையான கள ஆய்வுமுயற்சியில் வெளிவந்த ஒரே நூல் எனத் துணிந்து கூறலாம்.



                       எவ்வாறு எழுத்திலக்கியத்திதனை இயல், இசை, நாடகம். என வரிசைப் படுத்துகின்றனரோ அவ்வாறே நாட்டுப்புற இலக்கியத்தனையும் வரிசைப்படுத்தலாம், ஆனால் இசை, இயல், கூத்து என்று வரிசைப்படுத்த வேண்டம்.இவ்வரிசை முறையே இயல்பானது ஆகும். நாட்டுப்புறப் பாடல்களும், பறை, புல்லாங்குழல், கடம் போன்ற கருவிகளின் ஒலியை இசை என்ற பிரிவிலம் நாட்டுப்புறக் கதைகள், 
விடுகதைகள் போன்றனவற்றை இயலாகவும் ஒயில் ஆட்டம், கும்மி, தெருக்கூத்து போன்றனவற்றை கூத்து என்ற பிரிவிலும் அடக்கலாம். மனிதன் தன்னைத் தானே மகிழ்வித்துக் கொள்ளவும் தன்னைச்சார்ந்த மக்களை மகிழ்விக்கவும் பாடல்களைத் துணையாகக் கொண்டிருக்க வேண்டும். பாடல் சார்ந்து கதையும் பாடலும் கதையும் ஆட்டமும் சேர்ந்து கூத்துக்கலை உருவாகியிருத்தல் வேண்டும்.நாட்டுப்புற இலக்கியமே மனிதனின் உணர்வுகளை எவ்வித மேல் பூச்சின்றி, பகட்டின்றி, இலக்கண வேலிபோட்டுக்கொண்டு முடங்கிக்கிடக்காமல் காட்டுப்பூக்களைப் போன்று தன்னிச்சையாகப்பூத்து மணம் பரப்பிக்கிடக்கின்றன. இன்பமோ துன்பமோ அந்தந்த உணர்வு அப்படியே வெளிப்பட்டுவிடும் இலக்கியமே நாட்டுப்புற இலக்கியமாகும்.கம்பன் செய்தான் இராமாயணம், வள்ளுவன் தந்தான் குறள் இளங்கோயாத்தான் சிலம்பு என்பது போல இந்தபாடல் என்னுடையது இந்தக் கதை உன்னுடையது என்று எவரும் சொந்தம் பாரட்ட முடியாத மக்களின் இலக்கியமே நாட்டுப்புற இலக்கியமாகும். மேலும் நாட்டின் ஒவ்வொரு பகுதிக்கும் மண்ணிற்கும் மக்களின் இயல்புக்கும், அவர்களின் உழைப்புக்கும் தக்கவாறு மாறுபட இயங்குவது நாட்டுப்புற இலக்கியமாகும்.

                    வடதமிழ் நாட்டின் தாயின் தாலாட்டுக்கும் தென்தமிழகத்தின் தாயின் தாலட்டுக்கும் இடையே பொருளில் அல்லாது செல்லிலும், ராகத்திலும் வேறுபாடு நிறையக் காணலாம். மருதநில வயல் வெளிகளின் உழவனின் பாடுகளும் அவன் பாடல்களும் வேறு நெய்தல் நிலக் கடல் பரப்பின் மீனவனின் பாடுகளும் அவன் பாடல்களும் வேறு, மேலும் ஒரே நிலத்தல் ஒவ்வொருக்காலத்திலும் பாடப்படும் பாடல்களும் வேறுபடும் நடவுக்காலத்தில் பாடும் பாடல்கள் வேறு அறுவடையின் போது பாடப்படும் பாடல்கள் வேறு ஒரே பொருளிலான பாடல் மனிதர்களின் இயல்புக்கும் விருப்பிற்கும் ஏற்ப மாறுபட்ட ராகத்திலும் தாளத்திலும் பாட்ப்படும்.

                    மேல்தட்டு வர்க்கத்தினர் பாடும் பாடலை ஒருவர் பாட பலர் ரசிப்பர் ஆனால் நாட்டுப்புறப் பாடல் பெரும் பாலும் கூட்டிசையே ஆகும் மேல்தட்டினரின் கர்நாடக இசைப் பாடல்களை தோடியில் பாடுவதை காம்போதியில் பாட முடியாது கூடாது ஆனால் இசையைக் கட்டுப்படுத்த நாட்டுப்புறத்தில் எவரும் கிடையாது.

                    நாட்டுப்புறப் பாடல்களை வாழ்வின் ஒவ்வொரு பருவத்தின் அடிப்படையில் பகுக்கலாம் மழலைப் பருவத்திற்கான தாலாட்டுப் பாடல்கள், விளையாட்டுப் பருவத்தினருக்கான பல்வேறு வகை விளையாட்டுக்களின் போது பாடப் படும் பாடல்கள், இளமைப்பருவத்திற்கே உரியதான காதற் பாடல்கள், தொழில் செய்யும் பொழுது பாடப்படும் தொழிற் பாடல்கள், இறப்பின்போது பாடப்படும் ஒப்பாரி என்றும் வகைப்படுத்தலாம்.

தாலாட்டு:

                 தாலாட்டு என்பது அன்னையின் கற்பனை..... அவளின் ஆசைகள்... நிராசைகள் என விரிந்து கிடக்கிற ஒன்றாகும் தாலாட்டிற்கு இறையனார் களவியல் இரண்டாம் சூத்திர உரை "ஓலுடன் ஆட்ட" என்ற குறிப்பு வருகிறது. இதிலிருந்து பழங்காலம் தொட்டே தாலாட்டி குழந்தையை உறங்கவைத்தல் என்ற வழக்கம் இருந்து வந்துள்ளது என்பதும் "ரா...ரா...ரா... ரீ.., ரோ... ரோ... ரோ... ஆயி, லு... லு... லு... லூ ஆயி" என்ற ஒலிப்புடன் தாலாட்டுப் பாடல்கள் கேட்டே குழந்தைகள் உறங்கியுள்ளனர். இன்றைய குழந்தைகள் எதைக் கேட்டு உறங்குகின்றனர் "தாலாட்டுத் தெரியாத பெண்டிர் தவிட்டைப் போட்டுப் பிள்ளை வளர்க்கலாம்'' என்ற திட்டவே தோன்றுகிறது.

                தாலாட்டும் தாய், அழும் தன் குழந்தையை அழும் காரணம் கேட்பதாகவும் அதன் காரணத்தைத் தானே யூகித்து கொண்டு அழும் குழந்தையை சமாதானப் படுத்துதாகவும் பெரும் பாலும் பாடல் ஆரம்பமாகும் "ஆராரோ... ஆரிரரோ... ஆரடிச்சு நீ அழுதே... அரடிச்சா சொல்லியழு... ஆக்கினைகள் செய்திடுவோம்...தொட்டாரச் சொல்லி அழு... தோள்விலங்குப் பூட்டிடுவோம்... அத்த அடிச்சாளா அரளிப்பூச் செண்டால... மாமன் அடிச்சானா மல்லிகப்பூ... செண்டால... என கேள்வியும் பதிலுமாகத் தாலாட்டு தொடரும்.

               தாலாட்டின் வழியே தாய் தன் குழந்தையின் அழகு.... அவளுக்குத் தன் குழந்தையின் மீதுள்ள பாசம், தான் பிறந்த குடியின் பெருமை. தான் புகுந்த குடியின் பெருமை என பாடல் சென்று கொண்டே இருக்கும் தாலாட்டைக் குழந்தை மட்டுமா கேட்கும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தத்தம் ேலைகளைப் பர்த்துக் கொண்டே ரசித்துக் கொண்டிணருப்பர் ஏன் தாயே கூட தன் பாட்டில் தானே மயங்கி குழந்தை உறங்கிய பின்னரும் கூட அவள் கை தூளியை ஆட்டிக் கொண்டிருக்கும் வாய் பாடிக்கொண்டிருக்கும். "தாலாட்டுப்பாடல்கள் இனிய இசையும் சொல்சித்திரங்களும் அரிய கருத்துகளும் கற்பனைகளும் கலந்திரக்கும்" என்று கலைக்களஞ்சியம் கூறுகிறது. தாலாட்டின் , இசை நீலாம்பரிராகம் தாலாட்டின் பாடு பொருள் குழந்தையின் அழகு, தந்தையின் வீரம், மாமனின் கொடை என்பதை அடி நாதமாகக் கொண்டிருக்கும்.

ஆராரோ ஆரிராரோ
ஆறிரண்டும் காவேரி
ஆராரோ ஆரிராரோ.... கண்ணே
ஆறுலட்சம் வண்ணக்கிளி
ராராரோ ராரிராரோ... என்கண்ணே
ராமரும் உன்னைத் தந்தாரோ
என ஒரு தாய் பாடுவாள்

                 இன்னொருத்தி,
ராரிக்கோ... ராரிமெத்த- என்
ராமருக்கோ... பஞ்சு மெத்த 
பஞ்சு மெத்த மேலிருந்து- என்
பசுங்கிளியே கண்வளராய் 
                                          என்பாள்.

மற்றொருதாய்,
"ராரிக்கோ... ராரிமெத்த- என்
ராமருக்கோ... பட்டு மெத்த 
பட்டு மெத்த மேலிருந்து- என்
பவளமே கண் உறங்கு"
                                       எனப்பாடுவாள்

மற்றொருதாய்,
"ராமனார் மான் பிடிக்க- என்கண்ணே
லெட்சுமனார் பால்கறக்க
சீதை தயிர் கடைய- என் செல்ல மகன்
கண்ணசர.." என்பாள்
இந்தத் தாய் மார்களுக்கு ராமாயணம் உதவுகிறத 
தாலாட்டு பாட.

இந்த தாய்க்கு மகாபாரதம் பிடித்திருக்கும் போல

வீமனார் மரம் மறிக்க... என் கண்ணே
வில்விசயன் வண்டி செய்ய- உன்
மாமனோ மாடு பூட்ட- என் 
மரிக் கொழுந்து போற தெங்கே
                                           எனப்பாடுவாள்.

                      இந்த தாலாட்டுகள் பாடிய தாய்கள் என்ன வாயினர்? தூளி ஆடும் பொழுது எழும் ரீங்கார ஒலி என்னவாயிற்று? இன்றைய குழந்தைகள் கூட அழுவதே இல்லை இலேசாக சினுங்குகின்றனர்.சினுங்கல் ஒலி கேட்டவுடனே குழந்தை பால்புட்டியை சப்பியபடியே உறங்கி விடுகிறது.அன்றைய தாய்க்கு குழந்தை எறும்பு கடித்தால் எப்படி அழும் என்றும் பசித்தால் எப்படி அழும் என்றும் கனவுகண்டு அழும் அழுகை எவ்வாறு இருக்கும் என்றும். தூக்கம்கலைந்ததால் அழும் அழுகை எப்படி என்றும் தெரியும் இன்றைய தாய்க்கோ குழந்தையின் அழுகைக்குக் காரணம் தெரியாது தாலட்டவும் தெரியாது எல்லாவற்றையும் நாகரிகம் என்ற காட்டாறு அடித்துச் சென்றுவிட்டது.

                    குழந்தையின் வளர்ச்சியில் பூரிக்கும் தாயும் தந்தையும் ஒவ்வொரு நிலையிலும் மகிழ்ந்து பாடிய பாடல்கள் ஒவ்வொன்றும் கற்கண்டு என்றே கூறலாம்.

குழந்தை தவழும் போது
"தப்பளாங்கட்டி தவழ்ந்து வர 
தரை எத்தனை பாக்கியம் செய்ததோ"
                                                      எ தாய் பாடுவாள்.

குழந்தை சாய்ந்தாடும் போது குழந்தையை தன் கால்களில் தாங்கி தான் மல்லாந்து படுத்து,

"சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு
சந்தனக்கிளியே சாய்ந்தாடு
சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு
சுந்தரக்கிளியே சாய்ந்தாடு"
                                       என்று தந்தை பாடுவான்

"கைவீசம்மா கைவீசு
கடைக்கு போகலாம் கைவீசு
மிட்டாய் வாங்கலாம் கைவீசு
மெதுவாய் தின்னலாம் கைவீசு"
                                                                          என குழந்தையின் கையைப்பிடித்து வீசி வீசீ பாடும் உடற்பயிற்சி பாடல்.


உண்ணாத குழந்தைக்கு நிலவைக்காட்டி
"நிலா நிலா ஓடிவா
நில்லாமல் ஓடிவா
மலை மேல ஏறிவா
மல்லிகைப்பூ கொண்டுவா"
என்ற பாடல் குழந்தையின் உள்ளங்கையில் தன் முழுங்கையை வைத்து மத்து வைத்துக் கடைதல் போன்ற பாவனையில், 
பருப்புகட.... பருப்பு கட
என்று கூறி பின் குழந்தையின் ஒவ்வொரு பிஞ்சு விரலையும் எடுத்து "இது சோறு, இது குழும்பு, இது ரசம், இது மோரு, இது அப்பளம்..." என்று கூறி " கழுவி கழுவி நாய்க்கு ஊத்து கழுவி கழுவி நாய்க்கு ஊத்து" என்று கூறிய பிறகு குழந்தையின் உள்ளங்கையில் ஆரம்பித்து "நரி ஊருது நண்டு ஊருது" என்று சொல்லிக் கொண்டே குழந்தையின் கம்கட்டுப் பகுதியில் தன் விரல்களின் மூலம் கூச்சப்படுத்தி கிச்சுக் கிச்சு... என்று கூறி குழந்தையை மகிழ்வித்து தானும் மகிழ்ந்த தாய்கள் இன்று இல்லை.

                 அலுத்துக் களைத்து வீடு வரும் தந்தையின் முதுகில் யானை ஏற விரும்பும் குழந்தையை மகிழ்விக்க தந்தை யானை போல மண்டியிட்டுக் கொள்ள மனைவி தன் கணவனின் முதுகில் குழந்தையை ஏற்றிக் விட்டுப் பிடித்துக் கொள்ள

"யான யான அழகர் யான
அழகரும் சொர்க்கரும் ஏறும் ஆன
குட்டி ஆனைக்குக் கொம்பு மொளச்சுதாம் 
பட்டணம் எல்லாம் பறந்தோடிப் போச்சுதாம்"
என்று குழந்தையின் அக்காளபாட அந்த குதூகலமிக்க குடும்பங்கள் இன்று இல்லை. இன்று எல்லாரும் தொலைக்காட்சிப்பெட்டிகுள் காணமல் போயினர்.


விளையட்டின் போது பாடப்படும் பாடல்கள்:


                   பாடிக் கொண்டே விளையாடுவதும் விளையாடும் பொழுதெல்லாம் சிறுவர் சிறுமியரின் இயல்பு. பாடுவதும் ஆடுவதுமே நோக்கமாக இருப்பதால் சிறுவரின் பாடல்களில் பொருள் தேடவேண்டாம்.

"அதோ பாரு காக்கா
கடையில விக்கிது சீயக்கா
பொண்ணு வருது சோக்கா
எழுந்து கோடா மூக்கா"


"மல்லிகா மல்லிகா என்னக் கட்டிக்கோ
மாயவரம் போவலாம் வண்க்கட்டிக்கோ
என்னாடி கொழம்பு வைச்ச பொம்மனாட்டி
கருவாட்டுக் கொழும்புடா கம்மனாட்டி"


"பனமரமே பனமரமே
பச்சக் கண்ணாடி
பல்லிலாத கெழவனுக்கு
டபுள் பொண்டாட்டி"


"சார் சார் ஒன்னுக்கு
சட்டாம்புள்ள ரெண்டுக்கு
நா போறேன் வூட்டுக்கு
நாளைக்கு வந்தா கேட்டுக்கோ"
இவ்வாரு தெருக்களிலும், விளையாட்டுத் திடல்களிலும் பாடும் குழந்தைகள் இன்றில்லை.

                   அழுதுகொண்டிருக்கும் சிறு குழந்தையைச் சிரிக்க வைக்க முயலம் சிறுமி ஓருத்தி,

"கிச்சுக் கிச்சான்டி
கீரத்தண்டான்டி
நட்டுவைச்சான்டி
பட்டுப்போச்சான்டி"

எனப்பாடிக் கொண்டே குழந்தையைக் கிச்சுக் கிச்சு மூட்ட. அழுத பிள்ளை சிரிக்கத் தொடங்கும். அவ்வாறு சிரிக்கும் குழந்தைகள் 
"அழுத புள்ள சிரிச்சிச்சாம்
கழுத பால குடிச்சிச்சாம்"
என கிண்டலடிக்க சிரிச்ச பிள்ளை அழ ஆரம் பித்து விடும். அழுவதும் சிரிப்பதும் கூட விளையாட்டே.

                  ஒர சிறுமி இன்னொருத்தியின் கண்களைப் பொத்திக் கொள்ள மற்ற சிறுமிகள் கிடைத்த இடங்களில் ஒளிந்துகொள்வர். கண்ணைப்பொத்திய சிறுமி
"கண்ணா மூச்சி ரே ரே
காதடப்பான் ரே ரே
பீ முட்டத் தின்னிட்டு
நல்ல முட்ட கொண்டுவா"
எனப்பாடி அவளின் கையை எடுத்து விடுவிப்பாள் அப்பெண் ஒளிந்திருப்பவர்களைக்கண்டு பிடிப்பாள்.
  
                இரண்டு சிறுவர்கள் தங்களில் இரண்டுகைகளையும் பிடித்துக் கொண்டு கோபுரம் போல உயரே வைத்துக் கொள்வர். அந்த இடைவெளியில் சிறுமிகள் நுழைந்து வருவர் அவ்வாறு வரும் பொழுது ஒவ்வொரு சிறுமியும், 
"ஒரு குடம் தண்ணி தூக்கி
ஒரு பூ பூத்துச்சாம்
ரெண்டு குடம் தண்ணி தூக்கி
ரெண்டு பூ பூத்துச்சாம்"

என்று பத்து வரும் வரை எண்ணிக் கொண்டே நுழைந்து வருவர். பத்தாவதாக நுழையும் பெண்ணை சிறுவர்கள் தங்கள் கைகளுக்குள் பிடித்து வைத்துக்கொள்வர். ஒருசிறுமி சிறுவர்களிடம் வந்து அவளை விடுவிக்கும் படி கெஞ்சுவாள் அப்போது அவள் பாடுவது. தன் கனுக்காலிலிருந்து ஆரம்பித்து காட்டிக் கூறுவாள்.

"இத்த மூட்டும் பணம் தாரேன்
விடுடா துலுக்கா....."
என்பாள் சிறுர்களின் ஒருவன் 
"விடமாட்டேன் மளுக்கா"
                                        என்பான்
சிறுமி முழங்கால் வரை கையைக் காண்பித்து இந்த மூட்டும் பணம் தாரேன் விடுடா துலுக்கா
அவன்: "விடமாட்டேன் மளுக்கா,,,"
இந்த விளையாட்டு தலை உச்சி வரை செல்லும். தலை உச்சியைக் காண்பித்தப் பின்னரே அந்த சிறுமி விடுவிக்கப்படுவாள்.

திண்ணையில் அமர்ந்து சிறுமிகள் விளையாடும் ஏழாங்கல் விளையாட்டு முழுவதும் எண்ணிக்கை அடிப்படையில் அமைந்த பாடல் வரிகளாகும்.
ஒரி உலகள் உலகள சூரியன் 
சூரியன் தங்கச்சி
நாலக் கழிச்சிக்கோ
மாலையப் போட்டுக்கோ
--------------------------
--------------------------
--------------------------
இப்படி " பத்தே பதி பதி பாத்தப் பறி பறி.... என்று நீள பாடிக்கொண்டே மேலே கல்லெறிந்து அந்தக்கல் கீழே வருமுன்னே கீழிறுக்கும் கற்களைக் கூட்டி எடுத்து அதைப்பிடித்து விளையாடும் விளையாட்டு அந்த பாடல் அதன் ராகம் அனைத்தும் சொக்க வைக்கும் சொற்சித்திரங்கள்.
  
             சிறுவர்களின் சடுகுடு விளையாட்டின் போது பாடப் படும் பாடல்கள் ஒவ்வொரு பகுதிக்கும் வேறுபடும்,
"நாந்தான் கொப்பன் 
நல்ல முத்துப் பேரன் 
வெள்ளிபிரம்பெடுத்து
விளையாட வந்தன்டா
தங்கப் பிரம்பெடுத்துத்
தாலிகட்ட வந்தன்டா.... வந்தன்டா....

இன்னும் சிறுவர் பாடல்கள் எண்ணிலடங்காதவை உள்ளன.
"ராசா வந்தாராம்
ஆட்டம் போட்டாராம்
பன்னிக்குட்டியத் தூக்குப் போட்டுப்
பந்தடிச்சாரம்"


"போவப் போவ சவுளிக்கடி
போயிப்பாத்தா இடடிலிக்கட
இட்டிலிக்கும் சட்டினிக்கும் 
சண்ட வந்துதாம்
ஈரோடு மாப்பிள்ளைக்கு
தும்ம வந்துதாம்"


"கொழுக்கட்ட கொழுக்கட்ட
ஏன் வேகல?
அடுப்பு எரியல நா வேகல.
அடுப்பே அடுப்பே ஏன் எரியல?
மழபேஞ்சுப் போச்சு நா எரியல.
மழயே மழயே ஏன் பேஞ்ச?
புல்லு மொளைக்க நா பேஞ்சேன்.
புல்லே புல்லே ஏன் முளச்சே?
மாடு திங்க நா மொளச்சேன்.
இப்படி கேள்வியும் பதிலுமாக நீளும் பாடல்கள்
குவ்வா குவ்வா ரோட்டுல
குருவிக் குஞ்சு நிக்கிது
புடிச்சாடி புடிச்சாடி
புளிக் கொளம்பு வைப்போம்
எட்டிப் பாக்குற மாமியருக்கு
சட்டியப்போட்டு கவுப்போம்"

"டப்பா டப்பா வீரப்பா
டமுக்கு டப்பா வீரப்பா
எப்படா கல்யாணம்
மாசம் பொறக்கட்டும் 
மல்லிச்செடி பூக்கட்டும்"\

                 வட்டமாக அமர்ந்திருக்கும் சிறுவர் சிறுமியரைச் சுற்றி ஒருவன் பாடி கொண்டே வருவான். சிறுவர்கள் அவனுக்கு எதிர்ப்பாடுவர்

"காலே வலிக்குது"
"கட்டயத்தூக்கிப் போட்டுக்கோ"
"மேல வலிக்குது"
"மெத்தயில் படுத்துக்க"
"எரிக்கலாம் பழுப்பு"
"உனக் கென்ன கொழுப்பு"
                                   இப்படி பாடல் நீண்டு கொண்டே செல்லும். இன்றைய சிறுவர்கள் எவராகிலும் இவ்வாறு பாடுவதுண்டா எல்லாம் மறைந்து போயிற்று.


காதலர்கள் பாடும் பாடல்கள்:

                         காதல் என்பது பருவத்தில் ஏற்படும் உணர்வு, உள்ளம் இணைந்த இருவரும் மகிழ்டன் பாடுவது வேலைத்தளங்களிலும் காடுகரைகளிலும் மிதந்து கொண்டிருந்தன. இவகைக் காதல் பாடல்கள் நிலத்துக்குத் தக்கவாறு வேறுபட்டு அமையும்,

காதலன்:- "கானக் கரிசலிலே
களையெடுக்கும் சின்னவளே
நீலக்கருங்குயிலே
நிக்கட்டுமா போவட்டுமா"
காதலி: நிக்கச் சொன்னா நிடடூரம்
போவச் சொன்னா பொல்லாப்பு
நிக்கிறதும் போவுறதம்
உங்க இஷ்டம் கோனாரே"
                                                - இது மருத நிலக்காதல்

'' உழுத புழுதியலே
உப்புக் கொண்டு போற பொண்ணே
உப்பு வெல சொன்னா -நா
கொப்பு செஞ்சு போடுறண்டி
காஞ்சப் புழுதியிலே
கடல கொண்டு போற பொண்ணே
கடல வெல சொன்னா -நா 
கம்மல் செஞ்சு போடுறேன்டி''
                                                                                   -இது கரிசக் காட்டுக் காதல்.

"தூத்துக்குடி முத்தே நீ
தூய வைடூரியமே
பச்ச வைடூரியமே
பாத வழி பாத்தியளா" -இதுநெய்தல் நிலம்.

இப்படி தன் மகளிடம் காதல் வந்து விடுமோ என அச்சப்படும் தாய் ஒரத்தி
"தண்ணிக்குப் போ மகளே 
தல குனிஞ்சு வா மகளே
முன்னறியா ஆளிடத்தே
முகங்கொடுத்துப் பேசாதே"
ஆனால் மகளோ
''பாசம் புடிச்ச தண்ணி
பலரும் மோக்குந் தண்ணி
தெளிஞ்ச தண்ணி மோந்து வர 
செத்தநாழி ஆவும் தாயே''
என்று கூறிவிட்டு காதலனை சந்திக்கச் சென்று விடுவாள். காதலனுக்கு காதலியின் வீடு அடையாளம் தவறிவிட்டது.
"மின்னல் மின்னுதடி 
முன்னிருட்டு கம்முதடி
பாத தெரியலடி
பாதகத்தி உன்வூடு"
                             எனப்பாட அவள்

"கெண்டை போல
சுவர் எழுப்பி
கெழுத்தி போல
தூண் நிறுத்தி
அயிர போட்டு
மேஞ்சிருக்கு
அதுதான்ய என்வூடு"
                               என்பாள்

'' எல்லாரு தலையிலேயும் 
ஈறரிக்கும் பேனிருக்கும்
எங்கமச்சான் தலையிலே
எழுவகை பூமணக்கும்''
என தன் மச்சான் பெருமையைப் பேசுவாள்.

இன்னொருத்திக்கு அவள் மச்சான் உசத்தி
'' எல்லாரும் பல் விளக்க
அத்திக்குச்சி ஆலங்குச்சி
எங்க மச்சான் விளக்குறது
தங்கக்குச்சி வெள்ளிக்குச்சி''

சண்டையில் பிறக்கும் சிலகாதல்.
அவன்: "ரோசாப் பூ சேலக்காரி
ரோட்டு மேல பாத்துவாடி
காசு மிதந்தவளே
காளை வந்து பாயுமடி"

அவள்: ''அடியென்று சொல்லாதே
அறைஞ்சிடுவேன் கன்னத்திலே
தடிப்பயலே உன்னிட்ட
தம்பிடியும் இல்லையடா
                                        -இது காதலில்தான் முடியும். 

இந்த காதலிக்கு என்ன சோகமோ
"செத்து மடிஞ்சாலும் செலவழிஞ்சு போனாலும்
செத்த இடந்தனிலே செவ்வரளி பூப் பூப்பேன்
மாண்டு மடிஞ்சாலும் வைகுந்தம் போனாலும்
மாண்ட இடந்தனிலே மல்லியைா பூப்பேன்"
என்று தன் காதலின் சாகா தன்மையைப் பாடுகிறாள்.

காதலி பாடல்கள் காதலர்கள் பேசிக் கொள்வதாகவும் வினா-விடை அமைப்பிலும் அமைகிறது

காதலி: காடு வெளஞ்சென்ன மச்சான் நமக்குக் கையுங் காலுந் தானே மிிச்சம் 
இப்போ
காதலன்: காடு வெளையட்டும் பொண்ணே-நமக்குக் காலமிருக்குது பின்னே
(பட்டுக்கோட்டை) இவ்வாறான காதல் பாடல்களில் மச்சான், மாமா தங்கரத்தினமே, பொன்னுரத்தினமே, போன்ற வார்த்தைகள் மிகுதியும் இடம்பெறும்.இதன் பாடு பொருள் காதல் உணர்வே இதில் இரவுக்குறி, பகல்குறி, வழித்தடம் முதலியன கூறப்பெறுகின்றன. காதலுக்குத் தடையான பெற்றோர், சகோதரன், சாதி குறித்தும் பொருளாதார நிலையும் கூறப்பெறுகின்றன. கம்மாக்கரை கிணற்றுக்கரை, வயல்வெளியில் பாடப்படுபவை இவ்வகைக் காதல் பாடல்கள்.

தொழிற்பாடல்கள்:

                       ஏற்றப்பாடல்கள், களை எடுத்தல், நடவு, அறுவடை போன்ற சமயங்களிலும் வண்டி ஒட்டுதல், மரம் சுமத்தல், கடல் வெளியில் மீன் பிடித்தல் போன்ற கடின வேலை செய்யும் பொழுது களைப்பும் அலுப்பும் போகப் பாடப்படுவன தெம்மாங்குப் பாடல்கள். 
ஏ... தன்னான்னே தானே
அட தன்னானா தான ன்னனான்னே,,,, னே இதற்கு இசை ஒன்றே ஆயினும் அவரவரும் தம் விருப்பம் போல் ராகம் இழுத்துப் பாடுவர்.


ஒப்பாரிப்பாடல்கள்: 

                     இவ்வகைப்பாடல்கள் இழவுப்பாடல், ஒப்பாரி, மாரடிப்பாட்டு என பல பெயர்களில் வழங்கப் பெறுகின்றன எவ்வாறு தாலட்டு மங்கி மறைந்து விட்டதோ அதுபோல ஒப்பாரிப்பாடலும் மறையத் தொடங்விட்டது. இதற்கும் இயந்திர மயமாகலுக்கும் உலக மயமாதலுக்கும் என்ன சம்மந்ததம்? நாகரிகம் என்ற பெயரால் நம் தொல் மரபுகளை ஏளனத்துடனும் இழிவுடனும் நோக்கியதன் விளைவு இது. இன்றைய பெண்கள் பெருங்குரலெடுத்து அழுவது இல்லை. துக்கம் இலேகசான சினுங்கலுடன் முடிந்துபோகிறது.

"ஆலஞ்சருகுவாரி
அரைக் கிணறு நீரெடத்து
ஆக்கி வைச்ச சாதத்த.... அ.....
அள்ளி உண்ண வருவதைப்போ..."

"கள்ளப் பருப்பாச்சே
கசக்காத மேனியாச்செ
கசக்கிப் புழிஞ்சாரா... ஆ.....

என்று ஒவ்வொரு இழப்புக்கும் பாடப்பட்ட ஒப்பாரிகள் கொச்சம் கொஞ்சமாக கருகி வருகின்றன.

தன் மாமியார் இறப்பிற்கு அழும் பெண்ணொருத்தி அந்தத்துக்கத்தில் கூட மாமியைத்திட்டுகிறாள்.

"கடலப் பருப்பறியேன்
கால் கரண்டி நெய்யறியேன்
கண்டார் சிரிப்பாங்கன்னு
கண்டழுவா நா வந்தேன்''-என்று ஒப்பாரி வைக்கிறாள்.



                   இவ்வாறான தாலாட்டு, விளையாட்டுப் பாடல்கள், பொழுதுபோக்குப் பாடல்கள், தொழிற்பாடல்கள், காதல்பாடல்கள், ஒப்பாரி தவிர தெய்வவழிபாட்டுப் பாடல்கள், நாட்டுச்சிறப்பு பாடல்கள், கலகம், பஞ்சம், நலங்குப்பாடல்கள், பல்வேறு சடங்குகளின் போது பாடப்படும் பாடல்கள் என தமிழர் தம் நாட்டுப்புறப்பாடல்கள் எண்ணிறைந்தன. தவிர பெண்களின் கும்மிப்பாடல்கள், நிலவின் ஒளியில் பாடும் இராவண்டைப்பாடல்,ஏசல் பாடல், கள்ளர் பாடல் என நாட்டுப்புறப்பாடல்கள் பலவகையிலும் உள்ளன.

கும்மிப்பாடலில் நையாண்டியும் இடம்பெறுவதுண்டு

'' நெல்லு விளைஞ்சதப் பாருங்கடி
நெல்லு சாஞ்சதப் பாருங்கடி
நேத்து பொறந்த அத்த மவனுக்கு
மீசை மொளச்சதப் பாருங்கடி ''

கும்மிப்பாடலைப் போன்றே பெண்கள் வட்டமாக நின்று சிறு குச்சிகளைத்தட்டி விளையாடும் போது பாடப்படும் 
பாடல்கள் கோலாட்டப் பாடல்களாகும். கோலாட்டப்பாடல்களில் பெரும்பாலும் தெய்வங்களின் கதைகள், வீரர்களின் கதைகள் இடம்பெறும்.

சான்றாக கட்டபொம்மன் கதை கோலாட்டப்பாடல்

'' கோடி வந்தனம் மைந்தர்கள் தந்தனம்
கோலடியாட்டம் தானாட
குவலய மது புகழ் பிரவனம் பொன்னடி
குறித்துத் துதியது செய்வோமே
ஆதிநாளிலே கொத்துப்பல்லாரியை
ஆண்டிருந்தார் கட்டப்பொம்முதுரை
அட்டியில்லாமலே தெண்பாண்டி நாட்டினை
அடைந்து பொட்டிப்புறம் ஆண்டுவந்தார் ''

நையாண்டிப்பாடல்கள் மணவிழாவின் போது மாப்பிள்ளையை பெண்ணின் சகோதரிகள் கேலி செய்து பாடுவதும் பெண்ணை மாப்பிள்ளையின் சகோதரிகள் கேலி செய்து பாடுவதும் சில சமூகங்களில் வழக்கமாக இருந்தது.

'' கூரைச் சுவரேறி குதிச்சு வரும் மங்கையர்க்கு 
புண்ணியமா போவுதுண்ணு எங்களண்ணா
பொட்டு தரிச்சார்கள்
சோளக்கருது போல எங்களண்ணாவுக்கு
சோத்துப் பானத் தூக்கி மவ எங்கிருந்துவாச்சாயோ ''
                                                      - இது மாப்பிளையின் தங்கை கேலி செய்து பாடுவது.

'' தண்ணிக்குங் கீழே தாவுதையா உங்கருப்பு
மந்தையிலே நிக்கும் காக்கையைப் போல உங்கருப்பு
கோடலிப் பல்லருக்கு கொழுந்தியா ரண்டாச்சே
மம்பட்டி பல்லருக்கு மாமியா ரண்டாச்சே
ஒட்டுத் திண்ணக்காரருக்குப் பட்டுப்பா ரண்டாச்சே ''
                                                            -என்று மாப்பிள்ளையின் அழகைக் கேலி செய்யும் பெண்ணிண் தங்கையின் பாடல்.

                      நாற்று நடப்பாட்டு,களையெடுக்கப் பாட்டு, அறுவடையின் போது பாட்டு என தமிழர் தம் வாழ்வு பாடலுடன் பின்னிப்பிணைந்திருந்தது.

''கோடைக் காலக் கதிரறுப்பாம்
கொடிக்காலோரம் சேர்ந்தறுப்பாம்
நாளை நல்ல கதிரறுப்பாம்
நானும் வரக்கூடாதோ''

ஓரிடத்திலிருந்து பிரிதோரிடத்திற்குப் பொருள்களை ஏற்றிச் செல்லும் வண்டிக்காரர்கள் அலுப்பும் நீங்கவும் மாடுகளின் களைப்பு நீங்கவும் பாடிச் செல்வதே வண்டிக்காரன் பாட்டு.

''மாடு ரண்டும் மயிலக்காள- ஏலா மூக்காயி
மணிகள் ரண்டும் திருநவேலி- ஏலா மூக்காயி
கடலப்புடிச்ச வண்டி
கம்பம் போகும் வண்டி
கடல வெலயாக்கட்டுண்டி தங்கரத்தினமே - உனக்கு
கம்மல் செஞ்சு போடுறேன்டி தங்கரத்தினமே''


சுண்ணாம்பு இடிக்கும் பெண்கள் பாடும் பாடல்

'' ஆந்த அலறும் மரம் ஏலேலம்பா ஏலம்
ஆம்பளைங்க தூங்கும்மரம் ஏலேலம்பா ஏலம்
ஆம்பளைங்கு மூஞ்சப்பார்த்த ஏலேலம்பா ஏலம்
அய்க்கோர்ட்டு கொரங்கு போல ஏலேலம்பா ஏலம் ''

இதில் வரும் ''அய்க்கோர்ட்டு'' என்ற வார்த்தை சமீபத்தில் 1910களில் இப்படி பாடும் பழக்கம் இருந்திருக்க வேண்டும் என்பதைத் தெரிவிக்கிறது.

மீனவர் பாடும் பாடல் ஒன்று

'' விடி வெள்ளி நம் விளக்கு-ஐலேசா
விரி கடலே பள்ளிக்கூடம்-ஐலேசா
வாரிவாடி என் தாயே அம்மா 
வளைச்சு வாடி என் மச்சங்களை''

                      இவை தவிர கதைப்பாடல்கள் பல உண்டு. மனிதன் தன் மனதில் தோன்றியவற்றை கண்ணால் கண்டவற்றை மற்றவர்க்கு கதையாக ஓசை நயத்துடன் எடுத்துரைப்பதே கதைப்பாடலாகும்.கதைப்பாடல்களில் புராண கதைப்பாடல்கள்,தெய்வப்பாடல்கள்,வீரர்கள் பற்றிய பாடல்கள்,சமூக கதைப்பாடல்கள்,நிகழ்வுகளை கதையாக பாடுதல் என பலவுண்டு.சித்திரபுத்திர நாயனார்கதை,மதுரை வீரன் கதை,காத்தவராயன் கதை,இரணியாசுரன் கதை,ஐவர் ராசாக்கள் கதை,நல்லதங்காள் கதை, வீரபாண்டிய கட்டப்பொம்மு கதை, 
கோவிலன்-கர்ணகி கதை என கதைப்பாடல்கள் எண்ணிறைந்தன இவற்றையெல்லாம் தேடித்தேடிபடியெடுத் பதிப்பித்தார் நா.வா அவர்கள்.

                 இவ்வகைக் கதைப்பாடல்களின் வழியே மக்களின் நம்பிக்கைள், ஆசைகள், கனவுகள், சகுனம் பார்த்தல் மற்றும் பில்லி சூனியம், மந்திரதந்திர நம்பிக்கை, பலி கொடுத்தல் என பலவற்றை அறிய முடிகிறது. இன்னும் பேயாடுதல் பேயோட்டுதல் இவைகளை உடுக்கடிப் பாடல் மூலம் அறியலாம்.கதைப்பாடல்கள் வழி நிலவியல் அமைப்பு ஊர்களின் பெயர்கள்- ஓவ்வொரு ஊருக்குமான வழித்தடங்கள்-ஊர்களின் சிறப்பு என பலவற்றை அறியலாம்.இன்னும் லாவணிப்பாடல்,(மன்மதன் எரிந்த கட்சி- எரியாத கட்சி),வில்லுப்பாட்டு மூலம் கதை சொல்லுதல் என கதைப்பாடல்கள் பல வடிவங்களில் வெளிப்படுகின்றது.

              திருவிழாக்காலங்களில் கையில் டேப் வைத்துக் கொண்டு நிகழ்வுகளை,விபத்துகளை,கொலைகளை குறித்துப்பாடும் பாடல்கள் நடந்ததுண்டு. அரியலூர் ரயில் விபத்து குறித்து கும்பகோணம் குருசாமிதாஸ் என்பவர் உள்ளம் உருக கண்களில் நீர்பெருக பாடுவார்.அதனை சிறு புத்தகமாகவும் அச்சடித்து கூட்டத்தில் விற்பார். இவையும் சென்னை குஜிலிபஜாரில் அச்சடிக்கப்பட்ட பெரிய எழுத்து விக்கிரமாதித்தன் கதை,பெரிய எழுத்து நல்லதங்காள் கதை என திருவிழாக்களில் தடிமன் தடிமமான புத்தகங்களை விற்பர்.

            மேலும் நாட்டுப்புற இலக்கியத்தில் பழமொழிகளுக்கும்,விடுகதைகளுக்கும் கூட இடம் தரலாம்.பழமொழிகள் வாழ்வின் அனுபவ வெளிப்பாடகவும் கேட்போருக்கு பாடமாகவும் அமையும்.

சில பழமொழிகள்

'' ஆடத்தெரியாத தேவடியா முற்றம் கோணல்ன்னாளாம் ''
'' அடியாத மாடு பணியாது ''
'' ஆத்துலப்போட்டாளும் அளந்து போடனும் ''
'' தென்னமரத்துல தேள் கொட்ட பன மரத்துல நெறிகட்டிச்சாம் ''
'' சத்திரத்து சோத்துக்குத் தாத்தையங்கார் உத்தரவா ''
'' கும்மி கூழுக்கு அழுவுதாம் கொண்ட பூவுக்கு அழுவுதாம் ''
'' மவ வாழ்ற வாழ்வுக்கு மாசம் பத்துக்கட்டு விளக்குமாறு ''
'' விளக்கு மாத்துக்கு பட்டுக் குஞ்சமாம் ''
'' கொடும கொடுமன்னு கோயிலுக்குப்போனா அங்க ரெண்டு கொடும ஜிங்கு ஜிங்குனு ஆடிச்சாம் ''
'' குடிக்கிறது கூழு கொப்பளிக்கிறது பன்னீரு '' 

எண்ணத் தொலையா பழமொழிகள் நம் தமிழர்களின் நாவில் நடம் பயின்றன.அவையெல்லாம் எங்குபோயிற்று?
இப்போது பாட்டிகள் கூட பழமொழி வழி பேசுவதும் இல்லை, திட்டுவதும் இல்லை.பழமொழிகளில் சாதி மற்றும் தொழிலை இழித்து பேசுவன, பாலியல் பழமொழிகள், அறுவறுப்பானவை எனவும் உண்டு.

                விடுகதைகள் தமிழர்களின் வாழ்வில் பெருத்த இடம் பெற்றிருந்தது. விடுகதைகளுக்கு அழிப்பான் கதை, வெடிகதை எனவும் பெயருண்டு. இந்த புதிர் கதைகள் இன்றைய ''ஹைக்கு'' மாதிரியானவை.
சான்றாக,
'' அந்துவான காட்டிலே ஒரு சொட்டு ரத்தம்- அது என்ன? '' - விடை: குண்டுமணி

'' ஆழக்குழி வெட்டி அதிலே ஒரு முட்டையிட்டு அண்ணார்ந்து பார்த்தா தொண்ணூறு முட்டை- அது என்ன? '' - விடை: தென்னை மரம்

இது போன்ற விடுகதைகள் பெரியவர்களை விட சிறுவர்கள் மத்தியிலேயே அதிகம் புழங்கும்,புழங்கின. 


                    தமிழ் இலக்கியவாதிகள் மேல் கட்டுமானம், இடைக்கட்டுமானம் புற்றி எழுதிய அளவுக்கு அடிக்கட்டுமான மாகிய பாமரர் இலக்கியம் குறித்து சிந்திக்கவே இல்லை. சிறுகதைகள், நாவல்கள், கவிதைகள் என்ற அனைத்தும் பாமரர்களிடமிருந்து தள்ளியே இருந்தன. மேலை இலக்கயித் தாக்கமும், தாகமும் இருந்த அளவுக்கு நாட்டுப்புற இலக்கியமான பாமரர் பாடல்கள், கதைகள் குறித்து சிந்திக்கவே இல்லை. கு.பா.ரா ஆரம்பித்து சுஜாதா வரை நகரம் சார்ந்த சிறுகதைகளைப் படைப்பவர்களாகவும் மட்டுமே இருந்தனர். மேலும், இவர்களால் படைக்கப்பட்ட பலகதைகளும்,கவிதைகளும் கூட பிராமண இலக்கீயமாகவே பல்லிளித்தக் கொண்டிருந்தன. தமிழ் இனமொழி உள்ளவர்களாகத் தங்களை வெளிப்படுத்திக் கொண்ட திராவிட 
இலக்கியக்காரர்கள் முற்றிலும் வேறுவகையான, பாமரர்களிடமிருந்து அந்நியப்பட்ட செந்தமிழில், அடுக்கு மொழிகளில் ஆர்வம் காட்டினரே அன்றி பாமரர் இலக்கியம் என்ற ஒன்றிருப்பதையே அறியாது இருந்தனர். கம்யூனிஸ இலக்கியவாதிகளும் கூட ஆரம்ப காலங்களில் இப்படித்தான் இருந்தனர் அவர்களுக்கு ருஷ்ய இலக்கியம் மட்டுமே இலக்கியமாகப்பட்டது. தொ.மு.சி.ரகுநாதன், கி.வா.ஜெகந்நாதன், பெ.தூரன்,. போன்ற ஒருசிலர் நாட்டுப்புற இலக்கியம் குறித்து பேசினர். பின்னர் அவர்களும் குறைத்துக் கொண்டனர்.

                50,60 களில் வந்த பலதிரைப்படங்களில் நாட்டுப்பறப்பாடல் மற்றும் கதைகளின் தாக்கம் நிறைய இருந்தது. N.S.கிருஷ்ணன் தொடங்கி K.A.தங்கவேலு, சந்திரபாபு,A.கருணாநிதி என பல நகைச்சுவை நடிகர்கள் பாடிய பாடல்களில் நாட்டுப்புறப் பாடல்களின் சாயல் மிகுந்திருந்தது. N.S.கிருஷ்ணன் நாட்டுப்புறக் கதைகளை தன்நகைச் சுவைகாட்சிகளுக்குப் பயன்படுத்தினார். இலாவணி வில்லுப்பாட்டு என பல நாட்டுப்புற கலை வடிவங்களை தனது படங்களில் பயன்படுத்தினார்.

              கவி.கா.மு.ஷெரிப், (ஏரிக்கரையின் மேலே போறவளே பெண்மயிலே), பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்,(இந்த ஆட்டுக்கும் நம்ம நாட்டுக்கும் ஒரு கூட்டு இருக்குது கோனாரே),மேலும் மருதகாசி,ஊளுந்தூர்பேட்டை சண்முகம் போன்ற பல திரைப்பட கவிஞர்கள் நாட்டுப்பறப்பாடல்களின் சாயைகளை தங்களது பாடல்களில் கொண்டு வந்தனர்.

              நல்லதங்காள் கதை, மதுரைவீரன் கதை, கட்டபொம்முகதை, மருது சகோதரர்கள் கதை(சிவகங்கை சீமை),தேசிங்குராஜன் கதைகள்,ஆரவள்ளி சூரவள்ளி கதை, அள்ளிஅரசாணி மாலை,காத்தவராயன்கதை போன்ற நாட்டுப்புற கதைகள் திரைப்படங்களாயின. (ஆனால் என்ன, தெலுங்கை தாய் மொழியாக கொண்ட கட்டபொம்மு செந்தமிழிழ் முழங்கியதும் சிவாஜியின் மிகை நடிப்பால் கட்டபொம்மன் பின்னுக்கு தள்ளப்பட்டது குறித்தும் அன்றே விமர்சனம் இருந்தது என்பது வேறு கதை).நாட்டுபுற இலக்கியம் திரைப்படத்தில் ஏற்படுத்திய தாக்கம் அல்லது திரைத்துறை நாட்டுப்புற இலக்கியத்தை பாதித்தது குறித்து பெரிய புத்தகம் எழுதும் அளவுக்கு விஷயங்கள் இருக்கின்றன.

              இதுவரை நாட்டுப்புற இலக்கியம் என்றத் தலைப்பில் நாட்டுப்புறப்பாடல்கள், கதைகள், கதைப்பாடல்கள், பழமொழிகள், விடுகதைகள் என பல தலைப்புகளில் நாட்டுப்புற இலக்கியம் குறித்து ஆராய்ந்தோம்.ஆராய வேண்டிய நிலையில்தான்இவைகள் இருக்கின்றன. ஊடகங்களின் தாக்கம், இயந்திரமயமாதல், தொழில்மயமாதல், நகர்புறம் நோக்கி நகர்தல், கிராமங்கள் நகர நாகரிகங்களை தனக்குள் ஏற்றுக் கொள்ளுதல் இவ்வாறான பல்வேறு காரணங்களால் நாட்டுப்புற இலக்கியங்கள் அழிவின் விளிம்பில் இருக்கின்றன.தவிரவும் கற்றவர் பலரும்(முனைவர்) நாட்டுப்புற இசையை வளைத்து ஒடித்து தங்களுக்கு ஏற்றவாறு ஆக்கிக் கொள்கின்றனர். நாட்டுப்புற இலக்கியத்தை பணம் பண்ணுகின்றனர். $நாட்டுப்புறப்பாடல்களுக்கு சம்மந்தம் இல்லாத நகர்புற இசைக்கருவிகளைக் கொண்டு புதுமை புகுத்தி பழமையை அழிக்கின்றனர்.

              திரைப்படங்களில் நாட்டுப்புறப்பாடல் வரிகளைக் கொச்சைப்படுத்துகின்றனர். மேலும் திரைப்படங்களில் வரும் தெருக்கூத்துகளை நகைச்சுவைக்கான களமாக்கிவிட்டனர். தில்லான மோகனாம்பாள், வஞ்சிக்கோட்டை வாலிபன், சங்கராபரணம் போன்ற படங்களின் மூலம் நாதஸ்வரத்திற்கும் கர்நாடக இசைக்கும் ஏற்றம் செய்த திரைத்துறையினர். கரகாட்டக்காரன், வில்லுப்பாட்டுக்காரன் போன்ற படங்களின் திரைக்கதை அமைப்பில் நாட்டுப்புறக்கலை பின்னுக்குத் தள்ளப்பட்டு '' காதல் '' முன்னிறுத்தப்பட்டது.

                             ஆக, காப்பாற்ற யாரும் அற்றநிலையில் கையறு நிலையின் விளிம்பில் நிற்கிறது நாட்டுப்புற இலக்கியம் என்ற வருத்தத்துடன் கட்டுரையை நிறைவு செய்யலாம்

கட்டுரைக்கு உதவிய நூல்கள்:

 கிராவின் ''கதைசொல்லி'' இதழ்கள்

 நாட்டுப்புறப்பாடல்கள் - நவீன்குமார் வானதி பதிப்பகம்

 நா.வானமாமலை ஆராய்ச்சிவழித்தடம் - ஆசிரியர் முனைவர் இரா.காமராசு கீற்றுவெளியீடு
 
காமன் கதைப்பாடல்- ஓர் ஆய்வு - ஆசிரியர் கோவி.ராசகோபால்

 சிறுவர் நாட்டுப்புற விளையாட்டுப் பாடல்கள்- தொகுப்பு கயல்விழி- அநுராகம்

 நாட்டுப்புற மண்ணும் மக்களும்- டாக்டர்.கே.ஏ.குணசேகரன் NCBH

 நாட்டுப்புறத்தமிழ் தொகுப்பு- போராசிரியர் அசங்கரவள்ளிநாயகம் - அகரம் வெளியீடு

மற்றும்,

                  என் அன்னை சாரதாமணி பக்கிரிசாமி பிள்ளை பாடிக்காட்டிய தாலாட்டுப் பாடல்கள்

                  என் மனைவி வழி உறவுக்கார பெரியவர்கள்(சீதாசேகரம் கிராமம், மன்னார்குடி வட்டம்) பாடிக்காட்டிய பாடல்கள்.